"அரசு வேலைக்குப் படிக்கப் போகிறேன்" என்று முடிவெடுத்தவர்கள் பலர் முதல் சில வாரங்களை வீணாக்கிவிடுகிறார்கள்: குவியலாக வழிகாட்டி நூல்கள் வாங்குவது, வேறு ஒருவருக்காக எழுதப்பட்ட கால அட்டவணையைப் பின்பற்றுவது, அல்லது தமக்குத் தகுதியே இல்லாத தேர்வுக்குப் படிப்பது. தமிழ்நாட்டில் பெரும்பாலோர் எழுதும் TNPSC, காவல் துறைத் தேர்வுகளுக்கு, எங்கிருந்து தொடங்கலாம் என்பதை ஏழு படிகளாக இங்கே தருகிறோம். ஒவ்வொரு படிக்கும் ஓரிரு நாள் போதும்; ஒவ்வொன்றிலும், அதை ஒரு தேர்வுக்கு விரிவாகச் சொல்லும் எங்கள் பதிவுக்கு இணைப்பு உண்டு.

1. கல்வித் தகுதியும் வயதும் பார்த்துத் தேர்வைத் தேர்ந்தெடுங்கள்

எந்தத் தேர்வை எழுதலாம் என்பதை உங்கள் கல்வித் தகுதி முடிவு செய்கிறது; எத்தனை ஆண்டுகள் வாய்ப்பு உண்டு என்பதை வயது முடிவு செய்கிறது. கீழே உள்ளவை சமீபத்திய அறிவிப்புகளின் விதிகள்; ஒவ்வோர் அறிவிப்பிலும் இவை மாறலாம்.

கல்வித் தகுதி

தேர்வு

வயது (பெரும்பாலான பதவிகளுக்கு)

பத்தாம் வகுப்பு (SSLC)

TNPSC குரூப் 4

குறைந்தது 18; அதிகபட்சம் இதர பிரிவினருக்கு 35, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 37, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 40 (2026)

பத்தாம் வகுப்பு (SSLC)

TNUSRB காவலர்

18 முதல்; பொதுப் பிரிவினர் 26, பிற்படுத்தப்பட்டோர் 28, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 31 வயதுக்குக் கீழ் (2025); உயர அளவும் உண்டு

பட்டப்படிப்பு

TNPSC குரூப் 2, 2A

குறைந்தது 18; இதர பிரிவினருக்குப் பெரும்பாலான பதவிகளில் அதிகபட்சம் 32; பிற சமூகத்தினருக்குப் பெரும்பாலான பதவிகளில் உச்ச வரம்பு இல்லை (2026)

பட்டப்படிப்பு

TNUSRB சார்பு ஆய்வாளர்

20 முதல்; பொதுப் பிரிவினர் 30, பிற்படுத்தப்பட்டோர் 32, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயதுக்குக் கீழ் (2025); உயர அளவும் உண்டு

பட்டப்படிப்பு

TNPSC குரூப் 1

குறைந்தது 21; உச்ச வரம்பு பதவிக்கேற்ப மாறும்

இதிலிருந்து மூன்று விஷயங்கள்:

  • பட்டதாரிகளும் பத்தாம் வகுப்புத் தகுதித் தேர்வுகளை எழுதலாம். குரூப் 4 ஒரே தாள், பதவிகளும் அதிகம்; அதனால் பல பட்டதாரிகள் குரூப் 2 உடன் சேர்த்து அதையும் எழுதுகிறார்கள்.

  • காவல் துறைத் தேர்வுகளில் உடல் தகுதித் தேர்வும் உண்டு. திட்டமிடும் முன் உங்கள் உயரம் விதிக்குள் வருகிறதா என்று நேர்மையாகப் பாருங்கள்.

  • ஒரு முதன்மைத் தேர்வைத் தேர்ந்தெடுங்கள். குரூப் 4, குரூப் 2 இரண்டின் பொது அறிவுப் பகுதிகள் பெருமளவு ஒன்றே; காவலர், சார்பு ஆய்வாளர் தாள்களின் பாடங்களும் ஒன்றே. ஆகவே ஒரு திட்டம் ஓர் இணைக்குப் பயன்படும். எல்லாத் தேர்வுக்கும் ஒரே நேரத்தில் படிப்பது பெரும்பாலும் கைகொடுப்பதில்லை.

இந்த விதிகளை எப்படிப் படிப்பது, பல தேர்வுகளுக்குத் தகுதி இருந்தால் எதைத் தேர்வது என்பது தேர்வைத் தேர்ந்தெடுத்தல் பதிவில். பிறகு உங்கள் தேர்வின் தகுதிப் பதிவைப் படியுங்கள்: குரூப் 4, குரூப் 2, 2A, காவலர், சார்பு ஆய்வாளர்.

2. பாடத்திட்டத்தை ஒருமுறை நிதானமாகப் படியுங்கள்

அதிகாரப்பூர்வப் பாடத்திட்டம் சுருக்கமானது; தாளில் கேட்கக்கூடிய ஒவ்வோர் அலகும் அதில் இருக்கிறது. அதை அச்செடுத்து, ஒவ்வோர் அலகையும் முடித்ததும் குறியிடுங்கள். கேட்கப்படாததைப் படித்து நேரம் வீணாவது இதனால் தடுக்கப்படும். ஒவ்வோர் அலகையும் விளக்கும் எங்கள் பதிவுகள்: குரூப் 4, குரூப் 2, காவலர், சார்பு ஆய்வாளர்.

3. முந்தைய வினாத்தாள்கள் உண்மையில் என்ன கேட்டன என்று பாருங்கள்

எதைக் கேட்கலாம் என்று பாடத்திட்டம் சொல்கிறது; எதை, எவ்வளவு அடிக்கடி கேட்கிறார்கள் என்று முந்தைய வினாத்தாள்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, குரூப் 4 இல் 200 வினாக்களில் 100 தமிழ்; பொது அறிவின் 75 வினாக்களில் 40 தமிழ்நாடு தொடர்பான இரண்டு அலகுகளிலிருந்து வருகின்றன. அலகுவாரியாக நாங்கள் எண்ணியவை: குரூப் 4 வினா ஆய்வு, காவலர் வினா ஆய்வு, சார்பு ஆய்வாளர் வினா ஆய்வு. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப நேரத்தைப் பிரியுங்கள்.

வினா கேட்கப்படும் முறையையும் கவனியுங்கள். 2025 குரூப் 4 தாளில் பொது அறிவின் 75 வினாக்களில் 10 மட்டுமே நேரடி வினாக்கள்; மற்றவை கூற்றுகளைச் சரிபார்த்தல், இரு பட்டியல்களைப் பொருத்துதல், கூற்றும் காரணமும் என்ற வடிவங்களில் இருந்தன. செய்தி தெரிந்தால் மட்டும் போதாது; இந்த வடிவங்களில் பயிற்சியும் வேண்டும். பார்க்க: குரூப் 4 வினா அமைப்பு.

4. பள்ளிப் பாடநூல்களிலிருந்து தொடங்குங்கள்

குரூப் 4 தாள் பத்தாம் வகுப்புத் தரத்தில் அமைகிறது; ஆகவே 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசுப் பாடநூல்களே அதன் பெரும்பகுதியைத் தருகின்றன. காவலர் தாளின் பொது அறிவும் பத்தாம் வகுப்பு நிலையில்தான்; இரண்டு காவல் துறைத் தேர்வுகளின் தமிழ்த் தகுதித் தேர்வும் பத்தாம் வகுப்பு வரையிலான அரசுத் தமிழ்ப் பாடநூல்களிலிருந்தே வருகிறது. குரூப் 2 பொது அறிவு பட்டப்படிப்புத் தரம் என்றாலும், அதன் திறனறிவும் தமிழும் பத்தாம் வகுப்புத் தரமே; எனவே அதே நூல்களுடன் 11, 12 ஆம் வகுப்பு நூல்களும் அடிப்படை. வழிகாட்டி நூலைத் தொடும் முன் பாடநூலைப் படியுங்கள்: வழிகாட்டிகள் அவற்றைச் சுருக்கித் தருகின்றன, அவ்வளவே. எந்தப் பகுதிக்கு எந்த நூல் என்பது எந்தப் பள்ளிப் பாடநூல்கள் பதிவில்.

5. கடைப்பிடிக்க முடிகிற தினசரி அட்டவணை

இரண்டு வாரத்தில் கைவிடும் கச்சிதமான அட்டவணையைவிட, ஆறு மாதம் தொடர்ந்து பின்பற்றும் எளிய அட்டவணையே மேல். தொடக்கத்துக்கு ஒன்று கீழே; உங்களுக்கேற்ற அட்டவணையை அமைக்கும் முறை தினசரிப் படிப்பு அட்டவணை பதிவில்.

முழு நேரம் படிப்பவர்

வேலைக்குச் செல்பவர்

அந்த வாரத்தின் முதன்மைப் பாடம் (உங்கள் திட்டப்படி)

3 மணி

1 மணி 30 நிமிடம்

மொழி (தமிழ்; சார்பு ஆய்வாளருக்கு ஆங்கிலமும்)

1 மணி

30 நிமிடம்

திறனறிவு, காரணம் காணல்

1 மணி

30 நிமிடம்

நடப்பு நிகழ்வுகள்

30 நிமிடம்

15 நிமிடம்

உடற்பயிற்சி (காவல் துறைத் தேர்வுகளுக்கு)

1 மணி

45 நிமிடம்

வாரத்தில் ஒரு நாளைத் திருப்புதலுக்கும் நேரம் வைத்த ஒரு தேர்வுக்கும் ஒதுக்குங்கள். வாரவாரியான விரிவான திட்டம்: குரூப் 4, காவலர், சார்பு ஆய்வாளர்.

6. முந்தைய தாள்களை எழுதிப் பாருங்கள், பிறகு அலசுங்கள்

ஒரு முந்தைய தாளைத் தேர்வின் உண்மையான நேர அளவில் எழுதுங்கள்; அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புடன் மதிப்பிடுங்கள்; எழுதிய நேரம் அளவுக்கு அலசவும் நேரம் கொடுங்கள். ஒவ்வொரு தவறான விடைக்கும் காரணத்தைக் குறித்துக்கொள்ளுங்கள்: செய்தி தெரியவில்லையா, வினாவைத் தவறாகப் படித்தீர்களா, நேரம் போதவில்லையா? ஒவ்வொன்றுக்கும் தீர்வு வேறு. முந்தைய தாள்களை முழுமையாகப் பயன்படுத்தும் முறை: முந்தைய வினாத்தாள்களைப் பயன்படுத்துவது எப்படி, திருப்புதல், மாதிரித் தேர்வுகளை அலசுவது எப்படி. தலைப்புவாரியாகத் தீர்த்த எங்கள் வினாக்கள் வழிமுறையைக் காட்டும்: குரூப் 4 க்கு மீ.பொ.வ, மீ.பொ.ம, TNUSRB க்கு உறவுமுறை வினாக்கள்.

7. அறிவிப்பைத் தவறாமல் கவனியுங்கள்

தேர்வுகள், பதவிகள், வயது வரம்பு, தேதிகள் எல்லாம் ஒவ்வோர் அறிவிப்பிலும் மாறலாம். tnpsc.gov.in, tnusrb.tn.gov.in தளங்களை ஒன்றிரண்டு வாரத்துக்கு ஒருமுறை பாருங்கள்; அறிவிப்பு வந்ததும் விண்ணப்பிக்கும் முன் அதை முழுமையாகப் படியுங்கள்.

‹ படிப்பு உத்திகள்

படிப்பு உத்திகள்: மேலும்

பிழையைத் தெரிவிக்கவும்

இந்தப் பக்கத்தில் பிழை உள்ளதா?

உங்கள் பெயர், மின்னஞ்சல் எதுவும் சேமிக்கப்படாது.